வளைகாப்பு பெண்களுக்கு ஆசியுரை
பாடல்: 1
ஆண்டவரை நான் புகழ்வேன் (2)
என் அகமே மகிழ்ந்தே களித்திருப்பேன்
ஆண்டவரை நான் புகழ்வேன்
1. நானும் இரக்கமே நம்பியுள்ளேன் (2)
நாயகன் நீரென்று நினைத்திருப்பேன் – 2ஃ
இறைவா உம்மையே இசையால் புகழ்வேன் (3)
இதயம் உமக்கே கொடுத்திருப்பேன்
2. நன்மைகள் செய்திடும் ஆண்டவரே (2)
நன்றியும் வணக்கமும் ஆகிடுமே – 2ஃ
இறைவா உம்மையே இசையால் புகழ்வேன் (3)
இதயம் உமக்கே கொடுத்திருப்பேன்
பாடல்: 2
இயேசு என்னும் நாமம் பேசுகின்ற போது
என்னுள்ளம் மகிழ்வு கொண்டது – அதை
ஏழிசையில் பாடுகின்றது - 2
1. நான் மீட்பளிக்கும் மகிழ்வு கண்டேன்
வான் வீட்டவரின் அழைப்பை கேட்டேன் - 2
பெற்ற பெருவாழ்வை பகிர்ந்து கொள்கவென்று
பேசியவர் அனுப்பி வைத்தார்
தன் ஆவியவர் உயிரும் தந்தார்
2. என் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டார்
தன் இல்லந்தன்னை அங்கு கண்டார் - 2
இயேசுவும் நானும் மானிடர் யாவரும்
சேர்ந்தங்கே வாழ்ந்திருப்போம் – ஒரே
சகோதரராய் வாழ்ந்திருப்போம்
பாடல்: 3
இறைவன் உன் புகழ்பாட இங்கு இதயங்கள் பலகோடி
குறையெல்லாம் கடந்தவனே உன் துணை ஒன்றே நாம் தேடி
1. மறைபொருள் ஆனவனே - உன்னை
மனங்களில் சிறை வைத்தோம் (2)
குறையுள்ள கோவிலிலே - உன்னை
கொண்டு நாம் குடிவைத்தோம்
2. அன்பு உன் பேர் அறிவோம் - தூய
அறிவென்றும் நாம் தெரிவோம்
இன்பம் நீ எனத் தெளிவோம் - நல்ல
இரக்கம் நீ என மொழிவோம்
(கணவனும் மனைவியும் எரியும் திரியுடன் குருவின் முன் நிற்கின்றனர்)
குரு: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே.
எல்: ஆமென்
குரு: ஆண்டவரின் பெயராலே நமக்கு உதவி உண்டு.
எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.
நற்செய்தி: மாற்.9:33-37
இயேசுவும் சீடர்களும் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்தபொழுது இயேசு, “வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப்பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக் கொண்டு வந்தார்கள். அப்பொழுது அவர் அமர்ந்து பன்னிருவரையும் கூப்பிட்டு அவர்களிடம், “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” என்றார். பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, “இத்தகைய சிறு பிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னை மட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்” என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
அறிவுரை
பாடல்: 4
இயேசுவே உந்தன் வார்த்தையால் வாழ்வு வளம் பெறுமே
நாளுமே அன்பு பாதையில் கால்கள் நடந்திடுமே
தேவனே உந்தன் பார்வையால் என் உள்ளம் மலர்ந்திடுமே
இயேசுவே என் தெய்வமே உன் வார்த்தை ஒளிர்ந்திடுதே
1. தீமைகள் தகர்ந்தொழிந்திடும் உன் வார்த்தை வலிமையிலே
பகைமையும் சுய நலன்களும் இங்கு வீழ்ந்து ஒழிந்திடுமே (2)
நீதியும் அன்பு நேர்மையும் பொங்கி நிறைந்திடுமே
இயேசுவே என் தேவனே உன் வார்த்தை ஒளிர்ந்திடுமே
2. நன்மையில் இனி நிலைபெறும் என் சொல்லும் செயல்களுமே
நம்பிடும் மக்கள் அனைவரும் ஒன்றாகும் நிலைவருமே (2)
வென்றிடும் புது விந்தைகள் உன்னை புகழ்ந்திடுமே
இயேசுவே என் தெய்வமே உன் வார்த்தை ஒளிர்ந்திடுமே
ஜெபம்:
திருமதி..........................க்காகவும், இவரின் குழந்தைக்காகவும் மன்றாடுவோமாக.
(குரு தீர்த்தம் தெளித்தல்)
குரு:எல்லாம் வல்ல இறைவன் தந்தை, மகன், தூய ஆவி உங்கள் மீதும், குழந்தையின் மீதும் கருணை கூர்ந்து ஆசிர்வதித்து என்றும் காப்பாராக.
எல்: ஆமென்
சுகப்பேற்றுக்காக தந்தையின் செபம்:
எங்கள் ஆண்டவராகிய இயேசுவுக்கும், திருச்சபைக்கும் இடையே உள்ள ஒன்றிப்பைப் போன்று, மக்களின் வளர்ச்சிக்காகவும், அன்பு நிறை வாழ்வுக்காகவும் திருமணத்தை புனிதப்படுத்தியுள்ள இறைவா! நாங்கள் இருவரும் திருமணத்தின் அருளாசீரை வணக்கத்துடன் ஏற்று கொண்டிருக்கிறோம். நாங்கள் எங்கள் கடமைகளை குறைவின்றி நிறைவேற்ற அருள்வீராக. ஒரே உடலாக இணைக்கப்பட்டுள்ள நாங்கள் கிறிஸ்துவின் அன்பில் ஒருவருக்கொருவர் உண்மையுடன் வாழ்ந்திட செய்தருளும்.
எங்கள் அன்பின் பிணைப்பை பிரிக்கக்கூடிய அனைத்துக் குறைபாடுகளிலிருந்தும் எங்களைக் காத்தருளும். ஒருவர் ஒருவரிடம் நாங்கள் காணும் சிறு குறைகளை அவ்வப்போது மன்னித்து மறந்து விட்டு, நீங்கா அன்பில் நாங்கள் இருவரும் நிலைத்திருக்கச் செய்வீராக. பொறுமை, தாழ்ச்சி, இரக்கம், தியாக உள்ளம் எங்கள் அணிகலன்களாக விளங்குவனவாக.
இன்பத்தை ஏற்பதுபோன்றே, துன்பம் எங்களை அடுத்து வரும் போது, அதையும் உமது திருவுளத்துக்குப் பணிந்து ஏற்று, கிறிஸ்துவில் அதனைப் புனிதப்படுத்தும் பண்பினை எங்களுக்குத் தந்தருளும். எங்கள் தூய்மையும், அன்பும் ஒவ்வொரு நாளும் வளர்ந்திடச் செய்வீராக. திருக்குடும்பத்தை நாங்கள் பின்பற்றி, எந்நாளும் உம் திருவுள்ளத்தை நிறைவேற்றிட எங்களுக்குத் தேவையான அருளுதவியை அளிக்க வேண்டுமென எங்கள் ஆண்டாராகிய கிறிஸ்து வழியாக மன்றாடுகிறோம். ஆமென்
சுகப்பேற்றுக்காக தாயின் செபம்:
அமலன் இயேசுவின் அருள்நிறை அன்னையே, நீர் இறைவனுக்கு ஏற்ற ஆலயமாக விளங்கினீர். ஆதலின் அன்பின் இறைவன் தாமே உம்மில் மனிதர் ஆனார். அவரை உமது திரு வயிற்றில் தாங்கியதால், அன்னையர் அனைவருக்கும் பாதுகாவலி ஆனீர்.
இறைவனின் பேரருளால் நான் பெறப்போகும் என் குழந்தையைப் புனிதப்படுத்தியருளும். என் திருமண அன்பின் கனியான இக்குழந்தை நலமாகப் பிறந்திடச் செய்து, எங்கள் குடும்பத்தில் அகமகிழ்வை ஏற்படுத்தியருளும்.
இயேசுவை வளர்த்த இனிய அன்னையே, என் குழந்தை அறிவு, அன்பு, பண்புகள் அனைத்திலும் சீராக வளர்ந்திட
உதவியருளும்.உம் உறவினராகிய எலிசபெத்துக்கு உதவி
செய்திட விரைந்து சென்றீர். உம் வருகையால் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகை கொண்டு துள்ளிற்று. எனக்கும் என் குழந்தைக்கும் உம்முடைய சிறப்பான உதவி கிடைக்க வேண்டுகிறேன். – ஆமென்.
(சிறிது நேரம் மௌனம்)
குரு:
எல்லாவற்றையும் படைத்துப் பாதுகாத்து வரும் விண்ணகத் தந்தையே! நம்பிக்கையுடன் உம்மை அணுகி வந்திருக்கும் திருமதி ........................... ளின் தியாகத்தையும் காணிக்கையும் ஏற்று, இவரது இதய ஆவலை நிறைவேற்றியருளும். இவருக்கு நீர் அளித்திருக்கும் குழந்தையை எத்தீங்கும் நெருங்காதிருப்பதாக. அனைத்துத் தீமைகளிலிருந்தும் இவரைக் காப்பாற்றி, சுகமான பேறுகாலத்தைத் தந்தருளும். உள்ளத்திலும் உடலிலும் எக்குறையுமின்றிக் குழந்தை நலமுடன் பிறக்க அருள் தாரும். மேலும் இக்குழந்தை திருமுழுக்கு வழியாய் அருள் வாழ்வு பெற்று, முடிவில்லா வாழ்வு அடைவதாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்
ஜெபம்: (எல்லோரும் சேர்ந்து)
அன்பின் பிதாவே எங்கள் சகோதரியின் கர்ப்பத்தை ஆசிர்வதித்து, உம்முடைய தயவையும் இரக்கத்தையும் எங்கள் சகோதரிக்கு கொடுத்தமைக்காக உமக்கு கோடான கோடி நன்றி கூறுகின்றோம்.
நீரே என்னை கர்ப்பத்திலிருந்து எடுத்தவர் என்றும், என் தாயின் வயிற்றிலிருந்தது முதல் நீர் தேவனாயிருக்கிறீர் என்ற வாக்குதத்ததிற்கேற்ப, நீர் இந்த பிள்ளையை தாயின் கர்ப்பத்திலிருந்து பத்திரமாக எடுக்கப் போவதற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்.
மேலும் இந்த பிள்ளையைப் பாதுகாத்து, ஆசிர்வதித்து, உமக்கும் குடும்பத்தாருக்கும் மற்றும் நீர் படைத்த உலகிற்கும் ஆசிர்வாதமாக இருக்கும்படி இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே வேண்டி ஜெபிக்கிறோம். எங்கள் ஜெபம் கேளும் நல்ல பிதாவே. – ஆமென்
OR
1. ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! (எண் 6:24)
2. ஆண்டவர் தம் திருமுகத்தை உன் மேல் ஒளிரச் செய்து உன் மீது அருள் பொழிவாராக!. (எண் 6:25)
3. ஆண்டவர் தம் திருமுகத்தை திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக! (எண் 6:26)
4. உன் கர்ப்பத்தின் கனியையும், உன் நிலத்தின் பயனையும் ஆண்டவர் ஆசிர்வதிப்பாராக! (இணை 28:4)
5. நீ வருகையிலும் ஆசிர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசிர்வதிக்கப்பட்டிருப்பாய்! (இணை 28;6)
6. உன் களஞ்சியங்களிலும், நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திலும், ஆண்டவரின் ஆசி இருப்பதாக! (இணை 28:8)
- ஆமென்
மன்றாட்டுகள்:
1. அன்புருவான இறைவா! எங்கள் குடும்பங்களை உமது கைகளில் ஒப்படைக்கிறோம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையிலும், அன்பிலும், சமாதானத்திலும் நிலை பெற்று வாழ்ந்திட, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்.
2. அன்பான இறைவா! எங்கள் பங்கு தந்தை அவர்களை உமது கைகளில் ஒப்படைக்கின்றோம். அவருக்கு நல்ல உடல் சுகத்தை தந்து, உமது பணியை நிறைவேற்றி மக்களுக்கு நல்ல வழிகாட்டியாக விளங்கிட, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்.
3. தந்தையான இறைவா! ............................................. குடும்பத்தை உமது கைகளில் ஒப்படைக்கின்றோம். குழந்தை செல்வம் கொடுத்து ஆசீர்வதித்ததற்காய் உமக்கு நன்றி கூறுகின்றோம். குழந்தையை/ குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க பெற்றோருக்கு ஞானத்தை வழங்கிட, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்.
4. இறைவா! .................................வை உமது கைகளில் ஒப்படைக்கின்றோம். இப்போதும், பிரசவத்தின் நேரத்திலும் அவர்களுடன் நீர்தாமே துணை நின்று மன தைரியத்தை தந்து சுக பிரசவம் கிடைத்திட, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்.
5. அன்பான இறைவா, பிரசவ நேரத்தில் மருத்துவருக்கும், செவிலியருக்கும் நல்ல ஞானத்தை தந்து, ...................... க்கு சுக பிரசவம் நடக்கவும், பிறக்க இருக்கும் குழந்தை
நல்ல சுகத்துடன் பிறக்கவும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்.
கன்னிமரியா பாடல்: லூக். 1:46-55
குரு: நம் தாயாம் கன்னிமரியாவின் பாடலைச் சொல்லி /பாடி இறைவனைப் புகழ்வோம்.
1. ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது.
2. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.
1. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.
2. இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
1. ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர்.
2. அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
1. பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார். செல்வரை வெறுங்கையாய் அனுப்பிவிடுகிறார்.
2. மூதாதையருக்கு உரைத்தப்படியே அவர் ஆபிரகாமையும் அவர் தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்: தம் ஊழியராகிய இஸ்ரவேலுக்கு துணையாக இருந்து வருகிறார்.
OR
பாடல்: 5
என் ஆன்மா இறைவனையே
ஏற்றி போற்றி மகிழ்கின்றது
என் மீட்பராம் கடவுளை நினைக்கின்றது – 2
1. தாழ்நிலை இருந்த தம் அடியவளை
தயையுடன் கண்கள் நோக்கினார் – 2
இந்நாள் முதலாம் தலைமுறைகள் (2)
எனை பேறுடையாள் என்றிடுமே
2. ஏனெனில் வல்லமை மிகுந்தவரே
எனக்கரும் செயல்பல புரிந்துள்ளார் – 2
அவர் தம் பெயரும் புனிதமாகும் (2)
அவரில் அஞ்சுவோர்க்கிரக்கமாகும்
பாடல்: 6
தேனினும் நல்ல தாய்மையே
தேவருட் தகையே
தேடிடும் புகழ் பாடிடும்
உந்தன் சேக்கருள் மரியே – 2
1.இறைவன் இவளில் எழுந்த எளிமை
என்ன மகிமையோ - முன்பு
இறைவன் தெரிய இணங்கிய
இவள் பெண்மை எத்துனையோ
இறை அடிமையானவள்
எழில் முதன்மை யானவள்
தன்னையே முழுவதும்
தேவனில் தந்து தாழ்சியானவள்
2.முடிவில்லாத வின்ணை ஆளும்
இறைவன் மகள் அன்றோ – எழில்
முடியும் மின்னும் ஒளியை நுதழில்
அணிந்தவள் அன்றோ – எழும்
கதிரின் ஆடையாம் – இவள்
அணிந்த பெருமையாம்
ஜெபமாலை உலகை வெல்லும் நல்வழி
சொன்ன தாய்மையாம்