புனித சூசையப்பருக்கு செபம்(1900 ஆண்டுகள் பழமையானது)

புனித சூசையப்பரே! உம் அடைக்கலம் மிகவும் மகத்தானது. வல்லமை மிக்கது. இறைவனின் சந்நிதியில் உடனடி பலன் அளிக்க வல்லது. ஏனவே என் ஆசைகளையும், எண்ணங்களையும் உம் அடைக்கலத்தில் வைக்கிறேன்.உம் வல்லமை மிக்க பரிந்துரையால் உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய சேசுவிடம் எங்களுக்குத் தேவையான எல்லா ஆன்ம நலன்களையும் பெற்றுத்தாரும். இதன் வழியாக மறு உலகில் உமக்குள்ள ஆற்றலைப் போற்றி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு நன்றியும், ஆராதனையும் செலுத்தக் கடவேன்.புனித சூசையப்பரே! உம்மையும் உம் திருக்கரங்களில் உறங்கும் சேசுவையும் சதா காலமும் எண்ணி பூரிப்படைய தயங்கியதில்லை. இறைவன் உம்மார்பில் சாய்ந்து தூங்கும் வேளையில் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. உம் மார்போடு அவரை என் பொருட்டு இணைத்து அணைத்துக் கொள்ளும். என் பெயரால் அவருக்கு நெற்றியில் முத்தமிடும். நான் இறக்கும் தருணத்தில் அந்த முத்தத்தை எனக்குத் தரும்படி கூறும். மரித்த விசுவாசிகளின் ஆன்ம காவலனே எங்களுக்காக மன்றாடும். - ஆமென்.

வல்லமை மிக்க செபம்

நெஞ்சுக்கும் மார்புக்கும் நிறைந்த சிலுவை! நீச பிசாசுகளை விரட்டிடும் சிலுவை - சிலுவை அடியில் தலையை வைத்தேன். திருவிரலால் உடலை வைத்தேன். எனக்கு உதவியாக வாரும் திருச்சிலுவை ஐயாவே! - ஆமென்.

குருசான குருசே! கட்டுண்ட குருசே! காவலாய் வந்த குருசே! தொட்டியிலும், தண்ணீரிலும், சிங்கார மேடையிலும், துன்பப்படுத்தும் பிசாசுகளையும், எங்களை அறியாமல் எங்களுக்குத் தீமை செய்கிறவர்களையும் துரத்தி விடும் சிலுவையே! மூன்றாணி! மூன்றாணி! மூன்றாணி!

தூய சூசையப்பருக்கு நவநாள் செபம்:

எல்லாம் வல்ல எங்கள் அன்புத் தந்தாய், உம் ஒரே மகனின் வளர்ப்புத் தந்தையாக நீதிமானாக புனித சூசையப்பரைத் தேர்ந்தெடுத்தீரே. எங்களைக் காக்கவும் நல்வழியில் வளர்க்கவும் எங்களுக்கும் அவரைப்போன்றே காவலர்களைத் தந்தருளும். அதனால் உம் அன்பு மகன் இயேசுவைப் போன்று உருவாகும் இறைமக்கள் உமக்கு ஏராளமாகத் தோன்றுவார்களாக. இறைவனாயிருந்தும் உம்மையே சூசையப்பர் கையில் ஒப்படைத்து அவரது ஆதரவில் வளர்ந்த இயேசுவே, நாங்களும் எங்களை உருவாக்கும் பெற்றோர்களுக்கும், எங்கள் தலைவர்களுக்கும், திருச்சபைக்கும் எப்பொழுதும் எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்து நடக்க அருள்புரியும்.திருக்குடும்பத்தை உமது திருவருளால் திறம்படக் காத்த நித்திய புனித ஆவியே, எங்கள் குடும்பத்தையும் இறைவனின் திருவுளத்திற்கேற்ப அமைத்து பாதுகாத்தருள்வீராக. இயேசுவை வளர்க்கும் பணியில் புனித சூசையப்பரை உமது வாழ்க்கையின் துணைவராகவும் உமது இல்லத்தின் தலைவராகவும் ஏற்றுக்கொண்டு அவருக்குக் கீழ்ப்படிந்து பணியாற்றிய புனித கன்னிமரியே, அவருடைய மேலான பாதுகாவலை எங்களுக்குப் பெற்றுத்தாரும். அதனால் நாங்கள் இவ்வுலக வாழ்வை இறைவனின் திருவுளத்திற்கேற்ப எளிமையில் அமைத்து நடப்போமாக.திருக்குடும்பத்தின் தலைவரான புனித சூசையப்பரே, எங்கள் குடும்பத்தைப் பாதுகாத்து வழிநடத்துவீராக. திருக்குடும்பத்தை உம் உழைப்பாலும் உணவூட்டிக் காத்த புனித சூசையப்பரே, எங்கள் அறிவாலும், உழைப்பாலும், எங்கள் வீட்டையும் நாட்டையும் பாதுகாத்து செழிப்புறச் செய்து துணைபுரிவீராக.குழந்தை இயேசுவை ஆபத்திலிருந்து காப்பாற்றிய புனித சூசையப்பரே, எங்கள் வாழ்க்கையின் ஆபத்துக்களிலிருந்து எங்களைப் பாதுகாத்தருளும். இயேசுமரியின் கைகளில் உம் ஆன்மாவை ஒப்படைத்து நன்மரணமடைந்த புனித சூசையப்பரே, நாங்களும் நல்மரணமடைய எங்களுக்காக மன்றாடுவீராக. ஆமென்.                       

 புனித சூசையப்பர்  மன்றாட்டுமாலை:

சுவாமி கிருபையாயிரும் - சுவாமி கிருபையாயிரும்

கிறிஸ்துவே கிருபையாயிரும் - கிறிஸ்துவே கிருபையாயிரும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்

— கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா 

      -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதானாகிய சர்வேசுரா 

     -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

தூய ஆவியாகிய சர்வேசுரா  

     -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

புனித தமத்திருத்துவமாய் இருக்கிற ஏக சர்வேசுரா 

      -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

புனித மரியாயே ....எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

புனித சூசையப்பரே ...எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

தாவீது இராஜாவின் கீர்த்திபெற்ற புத்திரனே ...எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

பிதா பிதாக்களின் மகிமையே ...எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

தேவ தாயாரின் பர்த்தாவே ...எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

கன்னி மரியாளின் கற்புள்ள காவலனே ...எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

தேவகுமாரனை வளர்த்த தகப்பனே ...எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

கிறிஸ்துநாதரை உற்சாகப் பட்டுதலுடன் காப்பாற்றினவரே ...எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

திருக்குடும்பத்தின் தலைமையானவரே ...எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

உத்தம நீதிமானான புனித சூசையப்பரே ...எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உத்தம விரத்தரான புனித சூசையப்பரே ...எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உத்தம விவேகமுடைத்தவரான புனித சூசையப்பரே ...எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உத்தம தைரியசாலியான புனித சூசையப்பரே ...எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

உத்தம கீழ்ப்படிதலுள்ளவரான புனித சூசையப்பரே ...எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

உத்தம பிரமாணிக்கமுள்ளவரான புனித சூசையப்பரே ...எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

பொறுமையின் கண்ணாடியே ....எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

தரித்திரனின் அன்பனே ...எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

தொழிலாளர்களுக்கு மாதிரிகையே ...எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

சம்சார வாழ்வின் ஆபரணமே ...எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

கன்னிகையின் காவலனே ..எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

குடும்பங்களுக்கு ஆதரவே ...எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலே ...எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

வியாதிக்காரர்களுக்கு நம்பிக்கையே ...எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

மரிக்கிறவர்களுக்கு பாதுகாவலரே ....எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

பிசாசுகளை நடுநடுங்கச் செய்கிறவரே ...எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

பரிசுத்த திருச்சபையின் பரிபாலனே ...எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ! 

எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி . 

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ! 

எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி .

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ! 

எங்களைத் தயை செய்து மீட்டருளும் சுவாமி .

முதல்    : கர்த்தர் அவரை தமது வீட்டின் எஜமானாக ஏற்படுத்தினார் .

துணை  : அவருடைய உடமைகளை எல்லாம் நடப்பிக்கவும் ஏற்படுத்தினார் .

செபிப்போமாக : சர்வேசுவரா சுவாமி ! உம்முடைய மகா புனித மாதாவின் பரிசுத்த பர்த்தாவாக முத்தனான சூசையப்பரை மனோவாக்குக் கெட்டாத பராமரிக்கையால் தெரிந்துக் கொள்ளத் திருவுள்ளமானீரே ! பூலோகத்தில் அடியோர்களை ஆதரிக்கிறவரென்று எங்களால் வணங்கப்படுகின்ற அவர் பரலோகத்தில் எங்களுக்காக மனுப் பேசுகிறவராயிருக்கும் படிக்கு நாங்கள் பாத்திரவங்களாகும்படி தேவரீர் அனுக்கிரகம் செய்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம் .பிதாவோடும் தூய ஆவியோடும் சதாகாலமும் ஜீவியருமாய் ஆட்சி பண்ணுகிற ஆண்டவரே .   ஆமென் ..